சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சண்முகம். காவலாளியாக பணியாற்றி வரும் இவருக்கு, லட்சுமி என்ற மனைவியும் லாவண்யா (17), புவனேஸ்வரி (14) என இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை சண்முகமும் லட்சுமியும் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் அவரது மூத்த மகள் லாவண்யாவும் பள்ளிக்குச் சென்றுவிட்டார். ஆனால், புவனேஸ்வரி நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வராததால் சந்தேகமடைந்த லாவண்யா வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வீட்டிற்கு விரைந்த பெற்றோர் மகளின் உடலைக் கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.
அதன்பின் நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறை நடத்திய விசாரணையில், புவனேஸ்வரி வீட்டிலிருந்த தந்தையின் மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் அடகு வைத்து பணம் பெற்று, அதனைத் தோழிகளுடன் சேர்ந்து செலவு செய்துள்ளார். இது தெரிந்த சண்முகம் புவனேஸ்வரியை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் தற்கொலை செய்துள்ளார் எனக் காவல் துறை தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண் கணவருடன் செல்போனில் பேசியபோது உயிரிழந்த சோகம்!