சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பணிபுரிவதற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நீண்ட காலமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறை அளித்த அனுமதியைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அவர்களுக்கான போட்டித் தேர்வினை நடத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகமால் இருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் இன்று அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன், கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்கப்படுகிறது.
தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022 ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுள் 1,000 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்குனர் கூடுதல் பணியிடங்களை நிரப்புவதற்கும் அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். தொடக்கக்கல்வி இயக்குனரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது.
பரிசீலனைக்குப் பின்னர், தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023 - 2024ஆம் ஆண்டின் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையில், நிபந்தனைகளின் அடிப்படையில், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால் (IFHRMS) அனுமதிக்கப்பட்ட அளவை விட, உபரியாக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (deployment) செய்யப்பட வேண்டும்.
தற்போது ஆயிரத்து 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள மாவட்டங்களில், முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் முன்னுரிமை மாவட்டங்களில் தேர்வர்களை, முதலில் நியமனம் செய்யும்போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு, நியமனம் செய்யப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “ஆங்கில புத்தாண்டு பரிசா?” ஆவின் பால் விலை, அளவு மாற்றத்திற்குப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!