சென்னை: கரோனா பரவலால் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதே சிறந்தது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பொங்கல் விடுமுறை மற்றும் திருப்புதல் தேர்வுக்குப் பின்னர் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்கள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தற்போது, கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதால், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 19ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு ஜனவரி இறுதியில் உச்சத்தை தொடும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிப்பதால், 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் மற்றும் அதன் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும் என அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்