சென்னை: இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டு பள்ளிகள் செயல்படத் தொடங்கும்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. அதேபோல், நடப்பு கல்வியாண்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வகுப்புகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. கல்வித்தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு சென்றடைய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாட்ஸ் அப் மூலம் வினாதாள்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல், கால அட்டவணையை வாட்ஸ்-அப் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ்-அப் செயலி இல்லாத பெற்றோர்களுக்கு, பாடப்புத்தகங்களை வாங்க வரும்போது கல்வித்தொலைகாட்சியின் அட்டவணையின் நகலை வழங்க வேண்டும்.
மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளி ஆசிரியரின் செல்போன் எண்களை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்க வேண்டும்.
மாதத்திற்கு ஒரு பயிற்சி
மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடங்களுக்கு உரிய பயிற்சி வினாக்களை பெற்றோர்களின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ் அப் இல்லாத பெற்றோர்களை பள்ளிக்கு நேரடியாக அழைத்து பயிற்சி வினாக்களை கொடுத்தனுப்ப வேண்டும்.
விடைத்தாள்களை மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்கள் பெற்று திருத்தி ஒப்படைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு பயிற்சி என்ற அடிப்படையில் இதனைச் செய்யவேண்டும். நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் வரையில் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்களை கணக்கிட்டு, அந்த மாணவர்களுக்கும் உரிய கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிப்படை எழுத்தறிவுப் பாடங்கள்: கல்வித் தொலைக்காட்சியில் பாடம் கற்கலாம்