சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நீண்ட நாள்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. கரோனா பாதிப்பு குறைந்ததால் முதல்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இருப்பினும் பல மாவட்டங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிகள் திறந்தவுடன்தான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால்தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.
பள்ளிகளில் ஆய்வு
இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து கண்காணிப்புக் குழு அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது.
முன்னதாகவே செப்.1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் பள்ளிகளை கண்காணிக்க நான்கு ஐஏஎஸ் அலுவலர்கள் உள்பட 37 கல்வித்துறை அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. தற்போது இந்த குழு அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்தே 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
இதையும் படிங்க: கரோனா தொற்று பரவல் : மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை!