பள்ளிகளில் இந்து அமைப்புகள் மாணவர்களை மத ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதைக் கண்காணித்து, அத்தகைய நடவடிக்கையினைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர் மற்றும் இந்து இளைஞர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளில் மாணவர்களை ஒன்றிணைத்து; இந்து மதத் தலைவர்கள், இந்து மதக்கோட்பாடுகள், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை ஆணையர் வெங்கடேஷ், அனைத்துப் பள்ளிக்கல்வி, மெட்ரிகுலேசன், மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கல்லூரிகளில் இந்து இளைஞர் அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள், பிற மத மாணவர்களுடன் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பழகுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
பள்ளிகளில் குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பது, பன்முகத்தன்மைக்கு எதிரானது என்பதால், இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : '5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு;ஆனாலும் ஃபெயில் ஆக்க மாட்டோம்' - அமைச்சர் செங்கோட்டையன்