சென்னை அண்ணா சாலையில், உள்ள ரஷ்யா இல்லத்தில் நடைபெற்ற இந்தோ-ரசியன் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு புதிய லோகோவாவை உருவாக்கி வெளியிட்டது.
இதில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு பிரதிநிதிகளுக்கு விருதுகளை வழங்கி செய்தியாளார்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "நானும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே இந்தோ-ரசியன் நிறுவனத்திற்கு எனது உறவினருடன் வந்திருக்கிறேன்.
அந்த நிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்த அலுவலர்களைச் சந்தித்து, ஆர்வமாகத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கேட்டறிந்தேன்.
தமிழ்நாட்டில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து பெரும்பாலானோர் வேலைவாய்ப்பைப் பெற்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
தற்போது உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்.
ரஷ்யாவிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவிலும் அதே நிலைதான் உள்ளது. எனவே இரு நாடுகளும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் போதுமான அளவுக்குப் பகிர்ந்துகொள்ளலாம்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தோ-ரசியன் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பின் தலைவராக அனிருத் பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தினேஷ் குமார் துணைத் தலைவராகவும், மதியரசன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரஷ்யா இல்லத்தின் இயக்குநர் ஜென்னாடி அ ரோகளேவ், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகளை விளையாட அனுமதிங்க...பெற்றோருக்கு அமைச்சர் அட்வைஸ்