ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடியே நடைபெறும். பொதுத்தேர்வுகள் முடிந்ததும், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும். பெற்றோர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்.
அதேவேளையில் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது" என்றார்.
கரோனா காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வுகள் அவசியமா என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "வருகின்ற ஜூன் 1ஆம் தேதியன்றே விடுதிகளைத் திறப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அந்த ஆணையின் அடிப்படையில், விடுதியில் தங்கி படிக்கின்ற மாணவர்கள், அந்த விடுதியிலேயே தங்கிக் கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மாணவர்களுக்குத் தேவையான பேருந்து உள்ளிட்ட வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறன. ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் தேர்வெழுதினால் போதும் என்ற முறையில், மாணவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் என்ன குறிப்பிடுகிறதோ, அதைக் கடைப்பிடித்து வருகிறோம். மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குமரியில் மேலும் ஒரு காதல் க்ரைம்: அச்சத்தில் தவிக்கும் பெற்றோர்