சென்னையில் நடைபெற்ற அன்பாசிரியர் விருதுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சரின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட பாடங்களின் விபரங்கள் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது. அதன்படி தான் பொதுத் தேர்வில் கேள்விகள் இடம் பெறும்.
நடத்தி முடிக்காத பாடங்களை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். மேலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட பாடங்களை தவிர்த்து மீதும் இருக்கக்கூடிய நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து மட்டும் கேள்விகள் இடம்பெறும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது கோடை காலத்தில் பள்ளி வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் எனவும், குறைந்தது சனிக்கிழமையாவது பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது.
கரோனா பாதிப்பால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் நடப்பு ஆண்டு 10 முதல் 13 நாள்கள் வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல ஒன்றரை மாத காலம் கோடை விடுமுறை வழங்கப்படும்.
ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளில் அரசாணை எண் 101,108 ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் முதலமைச்சர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க;தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கை! - குழு அமைத்தது அரசு