சென்னை: பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக குவிந்துள்ள வழக்குகளை விரைந்து தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆயிரம் வழக்குகள்: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் நீதிமன்றங்களில் அதிகளவில் நிலுவையில் உள்ளன. தொடக்கக் கல்வித் துறையில் 3 ஆயிரம் வழக்குகளும், பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆசிரியர்களுக்கு சம்பளம், ஊதிய முரண்பாடு, பணி வரன்முறைகள், பதவி உயர்வு போன்றவற்றை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சரியாக செய்யாமல் இருப்பதால் ஆசிரியர்கள் நீதிமன்றங்களை நாடி செல்கின்றனர். அங்கு தங்கள் தரப்பின் நியாயங்களை எடுத்துக் கூறி தீர்ப்பை பெற்றாலும் அதனை நிறைவேற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
கடுமையான நடவடிக்கை: இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் ஆணையர் நந்தகுமார், துறையின் தற்போதைய முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து, இரு அதிகாரிகளும் நேற்று மதுரை கிளையில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தெரிவித்து தங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய இரு அதிகாரிகளும் தெரிவித்தனர். இதை அடுத்து கைது வாரண்ட் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, துறை முதன்மை செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நீதிமன்ற வழக்குகள் சார்ந்த உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வித்துறை சார்ந்து அதிக அளவில் வழக்குகள் இருக்கின்றன. ரிட் மனுக்களும் அதிக அளவில் தாக்கல் ஆகின்றன. வழக்குகளில் மனுதாரர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அதனை குறிப்பிட்ட காலங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
நீதிமன்ற அவமதிப்பு ஏற்படக்கூடாது: நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலக்கெடு விதிக்கும் பாேது அதனை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல், நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அதனை பதிவு செய்து கவனமாக கண்காணிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் குறித்து சட்ட அலுவலரிடம் கருத்துக் கேட்டு, மேல் முறையீடு செய்ய முடியாத நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உத்தரவை அமல்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்புகள் பெறப்பட்ட உடன், சட்ட மேலாண்மை அமைப்பின் மூலம் மாநில அளவில் கண்காணிக்கப்பட வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவர், இணை இயக்குநர்கள், துறையின் இயக்குநர்கள் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படாமல் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதன்மை செயலாளர் காகர்லா உஷா விரிவாக ஆலோசனை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐடிபிஐ வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!