சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் மாலை நேரங்களில் ஜெ.இ.இ, நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள், வார இறுதிநாளில் பயிற்சி வகுப்புகள், அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிச்சிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் தேர்விற்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை அளிக்க 438 மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைந்தப் பின்னர் மாணவர்களுக்கு கரோனா தொற்றின் காரணமாக நேரடியாக பயிற்சி அளிக்கப்படாமல், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன் மூலம் படித்த மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்று மருத்துவப்படிப்பு இடங்களில் சேர முடியவில்லை. கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளியில் படித்து, தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிகளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வுச் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
மேலும் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் மற்றும் தகைசால் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நீட், ஜெ.இ.இ ஆகிய போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இத்தகைய போட்டி தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் நீட், ஜெஇஇ பயிற்சி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் "அனைத்து அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் விருப்பமுடைய 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தினசரி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சி அளிக்க வேண்டும்.
போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் வேதியியல், இயற்பியல் ,விலங்கியல், தாவரவியல் பாட ஆசிரியர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு நீட் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும். அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிக்குரிய வினாத்தாள், விடைக்குறிப்புகள் பள்ளிக்கல்வித்துறையால் தயார் செய்து அனுப்பப்படும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாவட்டக் குழுக்கள் விளக்கம் அளிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.