சென்னை: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு டிசம்பர் 4, 5ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் தமிழ்நாடு அரசு இன்று விடுமுறை அறிவித்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (டிச.7) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற வேண்டிய மொழித்தாள் தேர்வு 14ஆம் தேதியும், 8ஆம் தேதி நடைபெற வேண்டிய ஆங்கிலம் தேர்வு 20ஆம் தேதியும் நடைபெறும். 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி தேர்வுகள் அந்ததந்தப் பாடத்திற்கு நடைபெறும். 6 முதல் 10 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்விற்கான கால அட்டவணையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு..! உதவி மையத்தின் வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு!