சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக 2019 மார்ச் 24 முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தன. அதனைத் தொடர்ந்து 2019 - 2020ஆம் கல்வி ஆண்டிலும் பாடத் திட்டங்கள் முழுமையாக நடத்தப்படவில்லை.
மாணவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் மூலமே நடைபெற்றுவந்தன. நடப்புக் கல்வி ஆண்டில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அச்சத்தைப் போக்க பாடத்திட்டங்கள் அறிவிப்பு
பின்னர் நவம்பர் 1ஆம் தேதிமுதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நடப்புக் கல்வி ஆண்டில் பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
மேலும் அதற்குள்ளாக மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தொடர்ந்து நடத்தி முடிக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடத்துவதற்குரிய பாடத்திட்டம், பாடப்பகுதிகள் ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும்வகையில், திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு!