சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆணையர் நந்தகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகம் வழங்குதல், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆணையர் நந்தகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தாய் தந்தையை இழந்த மாணவருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரிய ஆவணங்களை காலதாமதமின்றி அனுப்புதல், நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை பள்ளிக்கு அனுப்புவது, 11ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை உரிய ஆவணங்களுடன் விரைந்து அனுப்பிவைக்கவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கரோனா தொற்றால் அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு வருவதால் பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க ரோப் கார் - அமைச்சர் உறுதி!