பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை அரசுப் பள்ளிகளில் நேரடி தொடர்புடையவை. மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் சமீபகாலமாக குறைந்து கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமாக இருப்பதாக ஆண்டு ஆய்வறிக்கை தரவுகளும் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அரசு பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்பள்ளிகளை முறையாக ஆய்வு செய்வதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு புதிதாக ஒரு ஆணையர் பதவியை உருவாக்கியுள்ளது, ஐ.ஏ.எ.ஸ். அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறுகையில், "பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு மாணவர்களின் நலனைக் கருதி கல்வித்தரத்தை உயர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை கண்காணிக்கவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக நியமிக்கப்படும் ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களுக்கு ஆலோசனை வழங்குவது, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது போன்ற அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கென பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்கவுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.