சென்னை: ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த மார்ச் 16ஆம் தேதி ராயப்பேட்டை பகுதியில் கேலி கிண்டல் செய்ததால் கார்த்திக் என்பவரை வெட்டிய வழக்கில் சிறுவனை ராயப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து இருந்தனர். இந்த சிறுவன் 12-ம் வகுப்பு மாணவன் ஆவார்.
சிறுவன் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக நீதிமன்ற அனுமதியோடு பரோலில் வெளியே வந்தார். இன்று ராயப்பேட்டை வி.எம். தெருவில் கில் ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது சிறுவன் தேர்வு எழுதிவிட்டு தனது தந்தையுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 5 பேர் சிறுவனை கத்தியால், வலது பக்க கழுத்தில் குத்தியதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ரத்தக் காயத்துடன் கிடந்த மகனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ்அவுஸ் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் 5 பேர் தான் கத்தியால் குத்தியது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலர்கள் தப்பி ஓடிய அவர்களைத் தேடி வருகின்றனர்.