தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 16ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு அறிவித்தது.
ஆனால், உயர் கல்வித்துறையில் உள்ள கல்லூரிகள் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்தன. மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனிடையே 144 தடை உத்தரவை மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா கல்லூரி கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு அறிவித்துள்ளபடி ஏப்ரல் 14ஆம் தேதி வரை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: '11 லட்சம் N95 முகக் கவசங்கள் வாங்க ஆவண செய்துள்ளோம்'