டெல்லி: முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க தலைவருமான கருணாநிதியின் நினைவாக சென்னையில் நடுக்கடலில் ரூ.81 கோடி மதிப்பில் பிரமாண்ட பேனா (pen) வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் திமுக அரசு திட்டமிட்டது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு இச்சின்னத்தை அமைப்பதற்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் பல அரசியல் கட்சியினர் பேனா சிலை அமைப்பது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும், பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த மனு இன்று (ஆகஸ்ட் 1) நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது, இது அரசியல் மனுவாக இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கான களம் அல்ல என்று கூறியதுடன், இந்த போராட்டத்தை வேறு இடத்தில் நடத்த மனுதாரரின் வழக்கறிஞரிடம் கூறியது.
திமுக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பேனா சின்னம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காவு வாங்குவதாக நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள மனு அரசியல் உள் நோக்கம் கொண்ட மனு என்று வாதிட்டார். இவ்வழக்கில் வங்காள விரிகுடா கடற்கரையில் 360 மீட்டர் தொலைவில் 81 கோடி ரூபாய் மதிப்பிலான 42 மீட்டர் உயரமுள்ள பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மீனவர்கள் சிலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதையும் படிங்க: ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடரும் - தமிழக காவல்துறை டிஜிபி சபதம்; என்கவுன்ட்டருக்குப்பின் பேட்டி!
இந்த நினைவுச்சின்னத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளதை ஏற்க மறுத்த பெஞ்ச், “இது சுற்றுச்சூழல் கவலைகள் பற்றியது என்றால், ஏன் என்ஜிடி (தேசிய பசுமை தீர்ப்பாயம்) அதை விசாரிக்க முடியாது? ஏன் அனைத்தும் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டும்?” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தங்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை அமல்படுத்த மீனவர்களால் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை உச்ச நீதிமன்றத்தில் நேரடியாகப் பராமரிக்க முடியும் என்றும் வழக்கறிஞர் சித்தார்த் தவே வாதிட்டார்.
நினைவுச் சின்னத்திற்கான மற்ற ஒப்புதல்களுடன் கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களின் (CRZ) அனுமதியையும் மாநில அரசு பெற்றுள்ளதாகவும், மேலும் NGT இந்த விஷயத்தை கைப்பற்றியதாகவும் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் சமர்பித்தார்.
மேலும், மீட்கப்பட்ட கடலில் அரை ஏக்கர் பரப்பளவில் முன்மொழியப்பட்ட நினைவுச்சின்னம் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தவே வலியுறுத்தினார். இதற்கு வில்சன், மாநில அரசு ஆலோசனை செயல்முறையை மேற்கொண்டது எனவும்; இருப்பினும், நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் பொது விசாரணையில் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
பின்னர் சமர்ப்பிப்புகளைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் வினவிய பெஞ்ச், அடிப்படை உரிமைகள் தொடர்பான விஷயமாக இருந்தால், உயர் நீதிமன்றம் ஏன் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று வினவியதுடன், இந்த விவகாரம் உள்ளூர் பிரச்னை என்று சுட்டிக்காட்டியது. மேலும், இது சுற்றுச்சூழல் பிரச்னை என்றால் மனுதாரர் NGT முன் செல்லலாம் என்றது.
இந்நிலையில் இந்த மனுவை வாபஸ் பெற மனுதாரர் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த மனுவை வாபஸ் பெற்றதாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஜொலிக்கும் ஆஸ்கார் 'பொம்மன்'.. சென்னையில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!