சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ''மாதேபள்ளியில் உள்ள அருள்மிகு சக்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அகற்றக் கூடாது என்பதற்காக, தனது நிலத்தை சட்ட விரோதமாக எடுப்பதற்கு அறநிலையத்துறை முயற்சிப்பதாக தேசிய பட்டியலின ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சிவில் நீதிமன்றத்தின் உரிமையை ஆணையம் எடுத்துக்கொள்ள அதிகாரம் இல்லை என்பதால் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்தனர். இந்த உத்தரவு எப்படி பிறப்பிக்கப்பட்டது? என்றும் கேள்வி எழுப்பினர்.
பின்னர், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்குப் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.