சென்னை: சென்னையில், கடந்த 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை எஸ்பிஐ டெபாசிட் மிஷினை மட்டும் குறிவைத்து நூதன முறையில் பணம் திருடப்பட்டது. இதையடுத்து வங்கி அலுவலர்கள் அந்தந்த காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 45 லட்சம் ரூபாய்வரை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அதனடிப்படையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தியாகராய நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் ஏடிஎம் சிசிடிவி காட்சியில் பதிவான கொள்ளையர்களின் அடையாளங்களை வைத்து அவர்களைத் தேடிவந்தனர். குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதே பாணியில் கொள்ளை நடைபெற்றுள்ளது எனவும், இதைச் செய்தது ஹரியானா கும்பல் எனவும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
தொடரந்து, ஹரியானா விரைந்த தனிப்படையினர், அம்மாநில காவல்துறையினரின் உதவியோடு பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவரை கைது செய்தனர்.அவவரிடம், நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் 5க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து எஸ்பிஐ டெபாசிட் மிஷனைக் குறிவைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும், ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என கொள்ளையனை செய்யச் சொல்லி அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். இவரிடமிருந்து, 4.5 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மற்ற கும்பலை பிடிக்க தனிப்படை காவலர்கள் ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன திருட்டு நடந்தது எப்படி?