தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப். 6) காலை 7 மணிமுதல் நடைபெற்றுவருகிறது. இதனால் காலை முதலே திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகைதந்து வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளருமான உதயநிதி வாக்களிக்க தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார். அப்போது, அவர் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக திமுக கட்சிக்கொடி பொறித்த வெள்ளை நிறச் சட்டை அணிந்து வாக்களித்தார்.
இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், திமுக எப்போதுமே சட்டத்தையும் தேர்தல் விதிமுறைகளையும் மதிக்காது என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் கேட்டபோது, "தமிழ்நாடு முழுவதும், வாக்குப்பதிவு மிகவும் சுமுகமான முறையில் சென்றுகொண்டிருக்கிறது.
சட்ட ஒழுங்கிற்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஆறு மாதங்களாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்.
பெயர் விடுபட்டிருந்தால் பெயரைச் சேர்ப்பதற்குத் தாங்களாக முன்வர வேண்டும். உதயநிதி ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அந்த மாற்றத்திற்குத்தான் இது... சொந்த ஊரில் மண்ணின் மைந்தனின் விரல் 'மை' - இது அண்ணாமலையின் கட'மை'!