சென்னை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் நூர்ஜஹான் இணைந்து ஊடகச்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் சமூக நலத்துறை மானிய கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பதவி உயர்வு ஊதிய உயர்வு
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையைப் புதிதாக உருவாக்கியதற்கு மாநில செயற்குழு முதலில் வரவேற்கிறது.
மகளிர் உரிமைத்துறையில் பணிபுரிந்து வருகின்ற பெண் சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாள் வாழ்வாதார கோரிக்கைகளை, தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல், சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
இத்திட்டத்தில் 38 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வுபெறுகின்ற சத்துணவு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு ஓய்வூதியமாக வழங்கும் 2000 ரூபாய் என்பது வாழ்க்கை நடத்தகூட முடியாது.
கருணை அடிப்படையில் வாரிசு பணி
கேள்விக்குறியாக இருக்கின்ற சத்துணவு ஊழியர்களுக்கு, குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 9ஆயிரமும், ஒட்டு மொத்தத்தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி சத்துணவு மையங்களில், காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக புதிய நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும்.
அதற்கு முன்பாக தகுதியான உதவியாளர்களுக்கு சமையலர்களாகவும், பத்தாம் வகுப்பு படித்து முடித்த உதவியாளர், சமையலர்களுக்கு அமைப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்குவதுடன், இடமாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்களுக்கு, கலந்தாய்வு முறையில் இடமாறுதலும் வழங்கிட வேண்டும்.
எந்தவிதத்தில் நியாயம்
இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள், பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஆனால், பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லாதது, அனைத்து சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
மேலும் அகவிலைப்படி உயர்வும் 2022 ஏப்ரல் முதல் வழங்கப்படும் என்பதும், குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியதை வரவேற்றாலும், குறைந்த ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதம்தோறும் ரூ.110 பிடித்தம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
மருத்துவப்படி சத்துணவு ஊழியர்களுக்கு மாதம்தோறும் ரூ.300 வழங்கி விட்டு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மாதத் தவணையாக ரூ.300 பிடித்தம் செய்வது எந்தவிதத்தில் நியாயம். தமிழ்நாடு முதலமைச்சர் எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து, வருகின்ற சமூக நலத்துறை மானியக் கோரிக்கை தினத்தில் அறிவிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர்