சென்னை: சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்காததைக் கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் எடப்பாடி பழனிசாமி உட்பட 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், மாலை விடுவிக்கப்பட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா தான் முடிவெடுக்கும் நிலையில் இருந்தார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பாக மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்துள்ளது. வெறும் பாராசிட்டமலை மட்டும் டாக்டர் சிவகுமார் கொடுத்துள்ளார். இதெல்லாம் சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது என அறிக்கை கூறியுள்ளது. திமுக சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொள்கிறது. போராடக்கூடிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
காந்தி வழியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருப்பது என்பது சட்டவிரோதம் கிடையாது. சட்டப்பேரவையே திமுகவின் அறிவாலயம் ஆகிவிட்டது. மக்கள் பிரச்னைக்கு என்றுமே திமுக போராடியது கிடையாது.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றில் மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதியில் ரூபாய் 1000 தருவதாகக்கூறினார்கள். இதைப் பற்றி எல்லாம் பேசுவார்களா?" எனக் கூறினார்.
இதையும் படிங்க: குமரி சிறுவன் உயிரிழப்பு: குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காததால் காங்கிரஸார் போராட்டம்