சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கலானது. இதில் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் உள்ள முரண்பாடு உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் சசிகலா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டும் விதமாக பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து இருவர் இடையே சுமுக உறவு இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர் நிகழ்வுகளின் அடிப்படையில் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என குறிப்பட்ட ஆணையம் அவரிடம் விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளது.
சசிகலாவுடன் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.