வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 1994-1995ஆம் ஆண்டு சசிகலாவின் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை வருமான வரித்துறைக்குப் பட்டியல் அனுப்பிவைத்தது.
அதன் அடிப்படையில் 1994 - 1995ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வருமான வரியாக 48 லட்சம் ரூபாயைச் செலுத்த சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம், வருமான வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவுக்குப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டு முதல் நிலுவையிலிருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில் ”ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு கீழ் உள்ள வருமான வரி, தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வருமானவரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதற்கு வருமானவரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை திரும்பப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் இருப்பதாகவும் வருவாய் தணிக்கைப் பிரிவு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் ஆகியவற்றை திரும்ப பெற முடியாது என்பதால், இந்த மனு தொடர்பாக வருமானவரித் துறையில் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, வருமானவரித் துறையின் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஆசிய வங்கி அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!