சென்னை: தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தத்தை சட்டப்பேரவையிலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் நடத்தினர். சட்டப்பேரவை தொடங்கி 20 நிமிடங்களுக்குள் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததை எதிர்த்து, ஈபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். அப்பொழுது ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு தரப்பையும் அவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றினார்.
பின்னர் சட்டப்பேரவையை தொடர்ந்து சபாநாயகர் நடத்தினார். இதில் முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கையில்,"2012 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சுமுக உறவு இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
அமெரிக்காவிலிருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த நேரமும், மருத்துவமனையின் அறிக்கையும் முரணாக இருக்கிறது. இதனால் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியது. முதலில் இடைக்கால முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், நிர்பந்தம் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்.
பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓபிஎஸ் ஒரு அணியாகவும் ஈபிஎஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இரட்டை இலை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அப்போது ஈபிஎஸ் அணியில் இருந்த டிடிவி தினகரன் சிறை செல்ல, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்தனர்.
அப்போது ஒரு சில விவகாரங்களை முன் வைத்து இணைப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அதில் முக்கியமானது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது. இதை ஒப்புக்கொண்ட ஈபிஎஸ் அணியினர் இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
பின்னர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் விசாரணைக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்ட இறுதியாக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஓபிஎஸ் அமைக்க கோரிய ஆணையத்தால் சசிகலாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரும் இணக்கமான ஒரு சூழலில் இருக்கும் போது ஆணையத்தின் அறிக்கை சசிகலாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஈபிஎஸ்க்கு எதிரான யுத்தத்தில் ஓபிஎஸ்சுடன் சசிகலா கைகோர்ப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இதையும் படிங்க: நாளை அதிமுக உண்ணாவிரதம் ; சட்டப்பேரவையில் ஜனநாயகப் படுகொலை என புகார்...!