சென்னை: நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளான இன்று நாடெங்கிலும் சரஸ்வதி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைகளும், கல்வியும் சிறக்கவும், தொழில் வளம் பெருகவும் பூஜை செய்து வணங்குவது வழக்கமாகும். நல்ல நேரத்தில் பூஜை செய்தால் தொழில் வளம் சிறக்கும் என்பதும் ஐதீகம்.
சரஸ்வதி பூஜை சொண்டாடப்படும் இந்த நாளில் கடை வீதிகளில் பூக்கள், பழங்கள், பொரி கடலைகள் விற்பனையும், வாழை மர தோரணங்கள், அலங்கார பொருட்களின் ஆகியவற்றின் விற்பனையும் களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் சரஸ்வதி பூஜை செய்யப்படுவதன் காரணம் மற்றும் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
'சரஸ்' என்றால் பொய்கை என்று அர்த்தம், 'வதி' என்றால் வசிப்பவள். மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள் என பொருள் கொள்ளும். சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சை தருபவள் என்று பொருள். சரஸ்வதி - சரஸ் என்றால் சமஸ்கிருதத்தில் பேச்சு என்று பொருள். வதி என்றால் வாழ்பவள் அல்லது இருப்பிடமாக கொண்டவர் என்று பொருள்.
பேசும் திறமை, இதையே சைவ சித்தாத்தத்தில் கர்மா, மாயை என்கிறார்கள். அதை அகற்றி, ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை ஆகும். சரஸ்வதி கல்வி ஞானத்தை தருபவள் என்பதால், இந்த விழாவிற்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி உள்ளது. சரஸ்வதி ஞான வடிவானவள், ஞானம் எங்கிருக்கிறதோ அங்கு அடக்கம் இருக்கும்.
வானவில்லில் 7 வண்ணங்களில் சேராத வெள்ளை நிறத்தை மட்டுமே சரஸ்வதிக்கு சாத்துவர். தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு என தனிமரியாதை உள்ளது. அதாவது கற்றவர், மரியாதைக்குரியவர் என்பதை குறிக்கவே, கல்வியின் தெய்வமான சரஸ்வதி வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கிறாள்.
மேலும் வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால்தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு. கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும் என்பதே இதன் அர்த்தம்.
இன்றைய தினம் ஆயுத பூஜை செய்ய மதியம் 12.15 முதல் 2.15 மணி வரை நல்ல நேரமாக உள்ளது. அதேபோல மாலை 6.10 மணி முதல் 7.30 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், உற்பத்தி சாலைகள், வியாபார கடைகளில் பூஜை செய்து வழிபட்டால் தொழில் வளம் சிறக்கும் என கூறப்படுகிறது. வீடுகளிலும் இதே நேரத்தில் பூஜை செய்தால் வளமும் நலமும் பெருகும்.