சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் (SASY) சார்பில் மனித கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை & மறுவாழ்விற்கான சட்டம் 2013 குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
சென்னை கிறிஸ்தவ கல்லூரி, பொது நிர்வாக துறையில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் எஸ்.கல்யாணி என்பவர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் செயல் தலைவர் ரமேஷ்நாதன், "பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு 58 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஒரு உபகரணம் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் தூய்மை பணியில் ஈடுபடுவதன் காரணமாக பல்வேறு வகையான ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர். இருப்பினும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதன் காரணமாக அவர்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.
மலக்குழி மரணங்கள் ஏற்பட்டாலும் காவல்துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் செய்வதும் உரியப் பிரிவுகளைச் சேர்ப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது. மனித மலத்தை மனிதர் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இத்தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணி முழுவதுமாக இயந்திரமயமாக்கப்பட வேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பாக மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அவர்களின் மீது மனிதக் கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2016- யின் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை மூன்றாம் தர அரசியல்வாதி போல் செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்