சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் இயக்ககத்தின் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ராஜாமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜமணி,
" காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் சில எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற ஜல்லிகள் அறைத்தும், அரசிடமிருந்து தரச் சான்றிதழ் பெறாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து தரச்சான்று பெற்று எம் சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது திருச்சி மாவட்டம் முருங்கை, புதுக்கோட்டை மாவட்டம் முல்லையூர், கோவிலடி, நாமக்கல் மாவட்டம் அரியூர் ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே அரசு மணல் குவாரி விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தினமும் 35 ஆயிரம் லோடுகள் மணல் தேவைப்படக்கூடிய நிலையில் ஆயிரத்து 500 லோடுகள் மட்டுமே மணல் கிடைப்பதால் கட்டுமானப்பணிகள் முடங்கிப் போய் உள்ளது.
அரசு விதிமுறைப்படி மணல் வேண்டி விண்ணப்பம் செய்தாலும் இரண்டு மாதங்கள் லாரிகள் காத்திருக்க வேண்டியுள்ளன. லாரிகள் இரண்டு மாதம் காத்திருப்பதால் அதற்குரிய காத்திருப்பு வாடகை, ஓட்டுநருக்கு சம்பளம் போன்றவை அளிக்க உள்ளது.
எனவே மணலை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஒரு யூனிட் மணல் விலை பத்தாயிரத்திற்கும் மேல் விற்கப்படுகிறது. அரசு தினசரி மணல் அளித்தால் யூனிட் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் பார்க்க: 'சட்டவிரோதமாக மணல் அள்ளும் தனியார் நிறுவனம்' - 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை!