சென்னை: உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள், ஆனால் அதேநேரம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனவும் சொல்வார்கள். இது எந்தவகை உணவுகளுக்குப் பொருந்துகிறதோ என்னவோ உப்பிற்கு மிக கச்சிதமாகப் பொருந்தும். அறுசுவைகளில் ஒன்றான உப்பை எந்த அளவு பயன்படுத்தலாம், அளவுக்கு மீறினால் உடலில் என்னென்ன நோய்கள் மற்றும் பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாம்.
உப்புடன் தொடர்புடையதா உடல் ஆரோக்கியம்?
உணவில் உப்பு இல்லையென்றால் அவற்றில் சுவையும் இல்லை. உணவுகளின் சுவைக்கு உப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உப்பு முக்கியம்தான். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள, பற்களை ஆரோக்கியமாகப் பேணி பாதுகாக்க, வாய் மற்றும் தொண்டைப் புண் குணமடைய உள்ளிட்ட பல்வேறு நலன்தரும் பண்புகளைக் கொண்டது உப்பு. ஆனால் அதை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொண்டால் பல்வேறு நீண்டகால நோய்களுக்கு வழிவகை செய்யும்.
சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு உப்பை உட்கொள்ளலாம்; சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு சுமார் 3.75 கிராம் உப்பு வரை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியர்கள் தினமும் சுமார் 11 கிராம் வரை உப்பை உணவின் மூலமாக உடலில் சேர்க்கின்றனர். நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றில் அதிகம் உப்பு இருக்கின்றன. அதேபோல, பருப்பு வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் உட்படப் பல உணவுகளில் சோடியம் இருக்கிறது. இப்படி நாள்தோறும் நாம் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துக்கொள்ளும் உணவு மூலம் 11 கிராம் வரை உடலில் உப்பு சேர்கிறது.
அதிக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்:
- அதிகளவு உப்பு எடுத்துக்கொள்வதால் உடலின் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
- அதிக அளவிலான சோடியம் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாதல், சிறுநீரகம் பழுதடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
- உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துகள் எலும்பில் உள்ளன. ஆனால் இந்த சோடியமானது எலும்பில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சி விடுகிறது. இதனால் பல எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- அதிக உப்பை உண்ணும்போது, நமது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் சேதமடையும். மேலும், எடை அதிகரிப்பு மற்றும் தசை வலிகள் உண்டாகும்.
- அதிகமான உப்பால் உடம்பில் உப்புச் சத்து அதிகமாகி தைராய்டு பிரச்சனைகள் ஏற்படும்
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடாகம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், சேவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிக உப்பு மனிதனின் ஆயுளைக் குறைக்கும், உணவில் கூடுதல் உப்பைச் சேர்ப்பவர்கள் உடல்நிலை பாதிப்பால் முன்கூட்டியே இறக்கின்றனர். எனவே நீண்டகாலம் வாழ வேண்டும் என விரும்புபவர்கள் உணவில் உப்பைக் குறைப்பது மிகவும் நல்லது. எனவே, அளவான உப்பை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.
இதையும் படிங்க: 'கும்குவாட்' பழம்பற்றித் தெரியுமா? பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.!