சென்னை: 2023ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதுகளை மத்திய அரசு இன்று (டிச.20) அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான விருதாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு தமிழில் எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எழுத்தாளர் தேவி பாரதிக்கு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நாவல் முன்னதாக பல்வேறு விருதுகளை பெற்ற நிலையில், தற்போது சாகித்ய அகதாமி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களையும், அவர்களின் படைப்புகளையும் கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் மத்திய அரசு சாகித்ய அகாதமி விருதை, தேர்வு செய்யப்பட்ட இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கி வருகிறது. இலக்கியம், நாவல், சிறுகதை போன்ற பல்வேறு பிரிவிகளின் கீழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
யார் இந்த தேவிபாரதி? இந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிப்பில், எழுத்தாளர் தேவி பாரதியின் "நீர்வழிப் படூஉம்" என்ற தமிழ் நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தாளராகப் பணியாற்றி வருபவர் எழுத்தாளர் தேவி பாரதி. இவரது இயற்பெயர் ராஜசேகரன். ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையைச் சேர்ந்த இவர், ஆசிரியராக அவரது பணியைத் தொடங்கியுள்ளார்.
பின்னர் எழுத்தாளராக உருபெற்று, எளிமையான மக்களின் வாழ்வியலையும், அவர்களின் துயரங்களுக்கும் தன்மை மாறாமல் வடிவம் கொடுத்தவர் என்றும் அறியப்படுகிறார். இவரின் நாவலான நிழலின் தன்மை, இவரின் படைப்புகளில் சிறந்த படைப்பாக அறியப்படுகிறது.
அற்ற குளத்து மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் போன்ற பல்வேறு படைப்புகள் மூலம் வாசகர்களை தன்வசப்படுத்திய எழுத்தாளர் தேவி பாரதியின் மூன்றாவது நாவல்தான் தற்போது சாகித்ய அகதாமி விருதை தட்டிச் சென்றுள்ள நீர்வழிப் படூஉம். இந்த நாவல் இதற்கு முன்னதாக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நிலையில், தற்போது சாகித்ய அகாதமி விருதுக்கும் தேர்வாகியிருப்பதையடுத்து பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தளபதி 68’ படத்தின் தலைப்பு என்ன? சஸ்பென்ஸ் உடைத்த அர்ச்சனா கல்பாத்தி!