சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவில் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது துபாயிலிருந்து - மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களைத் தீவிரமாக கண்காணித்தனர்.
அதில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஜாவித் முஷார் (22) என்பவர், தனது பொருட்களை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியேற முயன்றதை அலுவலர்கள் பார்த்தனர். உடனே விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் முகமது ஜாவித்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இந்த விசாரணையில், ஜாவித் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அவரது உடமைகளைச் சோதனை செய்தபோது அதில் ஈரான் நாட்டு குங்குமப்பூ பாக்கெட்டுகள் அதிகமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரிடமிருந்த 63 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ 500 கிராம் எடை கொண்ட குங்குமப்பூக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது ஜாவித்தை கைது செய்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 4,320 மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது