வடகிழக்குப் பருவமழை, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை கன்னியாக்குமரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கீழே காண்போம்.
- மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆஃப் செய்ய வேண்டும்.
- உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.
- டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.
- வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
- மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.
- மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.
- மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
- மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இது குறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
- இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
- இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்