பரபரப்பான 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது, சாதிக் பாட்ஷாவும் சிபிஐ விசாரணைக்கு உள்ளானார்.
இதையடுத்து 2011ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சாதிக் பாட்ஷாவின் சடலம் மீட்கப்பட்டது. இதுவரை அவரது மர்ம மரணத்துக்கு விடை கிடைக்கவில்லை.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தன்னை மிரட்டுவதாக உள்துறை செயலரை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என் கணவரது நினைவஞ்சலிக்கு கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து எனக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்துவருகின்றனர். இதையடுத்து எனது காரும் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இது குறித்து காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தற்போது எனக்கு மறைமுகமாக மிரட்டல் வருகிறது. எங்களது ஆடிட்டர் மற்றும் நண்பர்களை சிலர் மிரட்டியுள்ளனர். இது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் செயலாகத்தான் இருக்கும் என்பதால் நடவடிக்கை எடுக்ககோரி உள்துறை செயலரிடம் புகார் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.