சென்னை: வெளிநாட்டு மருத்துவ கல்வி தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ள முறையினை ரத்து செய்ய வேண்டும் என ரஷ்யன் மெடிக்கல் கிராஜுவேஷன் அமைப்பின் ஃபவுண்டர் பிரசிடெண்ட் அருணாச்சலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அருணாச்சலம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ள வரைவு முறையினைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் எந்த ஒரு மாணவரும் மருத்துவ படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டாம்.
நீட் தேர்வு எழுதி இந்தியாவில் எந்த மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைக்காத மாணவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று படிக்கின்றனர். அவர்களுக்கு தேசிய மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் சாவலாக இருக்கும். காரணம், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
வெளிநாட்டில் படிக்கக் கூடிய மொழி ஆங்கிலத்தில் மட்டும் இருக்க வேண்டும். ஒரே கல்லூரியில் படித்து முடித்திருக்க வேண்டும். அவ்வாறு படிக்கும் மாணவர்கள், அதே நாட்டில் ஓர் ஆண்டு பயிற்சி மருத்துவர்களாக இருந்திருக்க வேண்டும். அந்த நாட்டிலேயே மருத்துவராக வேலை உரிமை பெற்றிருக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த பிறகு பகுதி தேர்வு எழுத வேண்டும். அந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பிறகு இந்தியாவில் மீண்டும் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக இருக்க வேண்டும். இவையெல்லாம் பத்து வருடத்திற்குள் முடித்திருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எவ்வாறு அந்த நாட்டில் மருத்துவத் துறையில் பணியாற்ற முடியும்? அதற்கு அந்த நாட்டு மருத்துவ கவுன்சிலிங் அனுமதி தேவை. வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் தருமா?
ஒரே கல்லூரியில் எவ்வாறு படிக்க முடியும்? உதாரணமாக, உக்ரைன் போர் நடந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு இது சாத்தியமா? மேலும், வெளிநாடுகளில் அந்தந்த தாய் நாட்டு மொழியில்தான் மருத்துவம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆங்கிலத்தில் மட்டும் எவ்வாறு படிக்க முடியும்? வெளிநாட்டு மருத்துவ கவுன்சிலிங்கில், இந்திய மாணவர்கள் எவ்வாறு உரிமம் பெற முடியும்? அது மிகுந்த சிக்கலாக இருக்கும்.
ஸ்கிரீனில் தேர்வு மிகவும் கடுமையானதாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எவ்வாறு கோச்சிங் சென்டர் நடைபெறுகிறதோ, அதே போன்று ஸ்கிரீனிங் தேர்வுக்கும் கோச்சிங் சென்டர்களை மருத்துவத் துறையைச் சார்ந்த அரசு ஊழியர்களை நடத்துகின்றனர்.மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வே தேவை இல்லை. 70 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படிப்பிற்கு சேர வைக்கலாம்.
ஒரு வருடத்திற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர். ரஷ்ய மருத்துவர் சங்கம் சார்பாக இந்திய மருத்துவ கவுன்சிலிங் சார்பில் வெளிநாட்டு மருத்துவ கல்வி தொடர்பான வரைமுறைகளை ரத்து செய்ய வேண்டும். நெக்ஸ்ட் தேர்வை நிறுத்தி வைத்ததுபோல் வெளிநாடு மருத்துவக் கல்வி தொடர்பான தேசிய கமிஷன் வெளியிட்டுள்ள புதிய வரைமுறையினை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் அதிகளவில் இடங்களைப் பெறும் முன்னாள் மாணவர்கள்