தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தொடங்க உள்ள 'பிட் இந்தியா' இயக்கம் தொடர்பாக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பாஸ்கரன், அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ”ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிலிருந்து அந்நாளை ’ஃபிட் இந்தியா’ நாளாக கொண்ட மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்தை பேணும் உடற்பயிற்சியை ஊக்குவிக்க 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்து உறுதிமொழி எடுக்க உள்ளார்.
இந்த நிகழ்வினை அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
மேலும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பிரதமரோடு இணைந்து 'ஃபிட் இந்தியா' உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, அந்தந்த பகுதிகளில் விளையாட்டு போட்டிகள், நடன நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள், கிராம, வட்ட, மாவட்ட அளவில் ஏற்பாடு செய்து அதில் என்எஸ்எஸ், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை பங்கு பெற செய்ய வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் ஒரு வார்டுக்கு ஒருவரை இது தொடர்பான ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும்.
’ஃபிட் இந்தியா' நிகழ்ச்சியை நடத்தியது தொடர்பான புகைப்படங்களை செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் ஊரக வளர்ச்சி முகமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.