சென்னை: காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்தியா 100ஆவது சுதந்திர தினத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
காமராஜருடைய ஆட்சி காலம் தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுடைய பொற்காலமாக இருந்தது. காமராஜர் ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாட்டில் உடைய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் காதி பொருட்களை ஊக்கவிக்க கூடிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மக்கள் காதி பொருட்களை வாங்கி அதன் விற்பனையை ஊக்கவிக்க வேண்டும்.
காந்தி சுத்தத்தை போற்றியவர். அவர் வழியில் ’சுவச் பாரத் திட்டம்’ மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மிக பெரிய வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம். ஆர்எஸ்எஸ் இன்று நேற்று வந்த அமைப்பு கிடையாது. 100ஆவது ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய ஒரு அமைப்பு. ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசபக்தி கொண்ட இயக்கம். நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய இயக்கம். பல லட்சம் தொண்டர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த இயக்கம்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் நாட்டின் பாதுகாப்புக்காக செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய இயக்கம். ஜவஹர்லால் நேரு கூட இந்த இயக்கத்தை தடை செய்ய பார்த்தார். அவரால் இயலவில்லை. இந்த இயக்கத்தை எந்த ஒரு தனி மனிதனாலும் தடை செய்ய முடியாது. ஆர்எஸ்எஸ் இயக்கம் சட்டத்துக்கும், நீதிக்கும், தர்மத்துக்கும் கட்டுப்பட்டு சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்த ஒரு தடவை மன்னிச்சிக்கோங்க.. சென்னை சிறுவனின் வைரல் வீடியோ