உலகம் முழுவதும் மாதவிடாயின்போது பெண்கள் சுகாதாரமாக இருப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் தினமான அந்த மூன்று நாட்களில் சொல்ல முடியாத வேதனையையும், சங்கடத்தையும் அனுபவிக்கிறார்கள். அப்படி இருந்தும் அந்நாட்களில் அவர்கள் வலியை பொறுத்துக்கொண்டு வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும் தங்கள் பணியைச் செய்கிறார்கள்.
நகர்ப்புறத்தில் இது குறித்து விழிப்புணர்வு இருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னும் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு இல்லை என்றே கூறலாம். இன்னும் பல கிராமங்களில் தரமான நாப்கின்களுக்குப் பதிலாக துணிகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் பெண்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வோரு ஆண்டும் மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று (மே 28) ஐந்து ரூபாய்க்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, இது குறித்து விஜய பாஸ்கர் கூறுகையில், 'மாநில அரசு ஒவ்வொரு வருடமும் 60 கோடி ரூபாய்க்கு சுகாதார நாப்கின்களை இலவசமாக வழங்கிவருகிறது. மாதவிடாய் சுகாதாரம் குறித்து மாநிலம் முழுவதும் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் நமது மக்களிடம் இது குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், விழிப்புணர்வு செயல்முறைத் திட்டமும், மாதவிடாய் காலங்களில் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் பெண்கள் ஐந்து ரூபாய் செலுத்தி ஒரு நாப்கினை பெற்றுக் கொள்ளலாம்.