கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை அரசு சார்பில் நடத்தப்படும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த தினம், மே 1ஆம் தேதி ஆகிய நாள்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், திமுக 16ஆயிரத்து 500 பஞ்சாயத்துகளில் தற்போது கிராம சபை கூட்டத்தை தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்குவதையொட்டி மக்களின் மனதைக் கவர பல்வேறு கட்ட முயற்சிகளில் திமுக செயல்படுகிறது. அதில் ஒரு வழிதான் கிராம சபை கூட்டம்.
இந்நிலையில், கிராம சபை தொடங்கிய இரண்டாம் நாளே அதிமுக அரசு தடை விதித்துள்ளது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவசரம் அவசரமாக தடை ஏன்?
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் அர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கிராம சபை கூட்டத்துக்கு எதிரான அரசாணையை ஹன்ராஜ் வர்மா நேற்று அவசர அவசரமாக வெளியிடுகிறார். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், அதை பற்றியெல்லாம் இந்த அரசு கவலைப்படாமல் இந்த வேலையை செய்கிறார்கள்.
மக்கள் கிராம சபை
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அதிமுக செயல்படுகிறது. கிராம சபை கூட்டத்தில் உள்ள 7 விதிகளையும் ஸ்டாலின் மீறவில்லை. இதுதொடர்பாக ஹன்ராஜ் வர்மாவுக்கு பதிலளித்துள்ளோம். மக்களவை நடவடிக்கை போல மாதிரி மக்களவை, மாதிரி நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதைப்போல் கிராம சபையை மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்த முடிவு செய்துள்ளோம்.
எல்.முருகனுக்கு கண்ணில்லை, காதில்லை
அரசின் கிராம சபைக்கும் இதற்கும் தொடர்பில்லை. அரசு நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு உள்ள 7 விதிமுறைகள் ஒன்றைக்கூட நாங்கள் மீறவில்லை. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல அதிமுக அரசு நடந்துகொள்கிறது. நாங்கள் எமர்ஜென்சி காலத்தையே பார்த்தோம். தடை சட்டங்களை சந்திக்க திமுக தயார், வழக்கு போட்டாலும் கவலையில்லை" என்றார்.
அதிமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என எல். முருகன் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, பாஜக மாநில தலைவர் முருகனுக்கு கண்ணில்லை, காதில்லை, பேசுவதற்கு வாயில்லை என பதிலளித்தார்.
இதையும் படிங்க: நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் 21 வயது இளம்பெண் மேயராகத் தேர்வு