சென்னை திருவல்லிக்கேணி விஆர் பிள்ளை கோவில் தெருவைச் சேரந்தவர் தொழிலதிபர் அருண்பாலாஜி (37). இவர் மீன்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவரது இரண்டு தளங்கள் கொண்ட வீட்டின் கீழ்தளத்தில் அருண்பாலாஜியின் தாயும், முதல் தளத்தில் அருண்பாலாஜியும் வசித்து வருகின்றனர்.
மேலும், முதல் தளத்திலுள்ள வீட்டை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்காக தி.நகரைச் சேர்ந்த இளங்கோ, மணிகண்டன் ஆகியோர் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அருண் தனது நண்பர்களிடம் 50 லட்ச ரூபாய் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்தார். பின்னர், தொழில் நிமித்தமாக தனது நண்பருடன் அருண்பாலாஜி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் அட்டைப் பெட்டியில் வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், தனது வீட்டில் பெயிண்டர் வேலை பார்த்து வந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தி.நகரைச் சேர்ந்த பெயிண்டர் இளங்கோ, மணிகண்டன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 5 லட்சம் ரூபாய் மட்டுமே திருடியதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேவாலயத்திலிருந்து ரூ.20,000 திருட்டு!