சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையைச் சேர்ந்த அப்துல் ஷமி(31) மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் வந்தார். அவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டதில் முன்னுக்குபின் முரணான தகவல்களை அவர் அளித்துள்ளார். இதனால் சுங்கத்துறை அலுவலர்கள் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசில் ஜப்பான் போன்ற நாடுகளில் பயன்படுத்தக்கூடிய அழகு சாதன மருந்துகளை அவர் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மருந்துப்பொருட்களை அவரிடமிருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சென்னையில் உள்ள பிரபல சிகை மற்றும் அழகு சாதன நிலையங்களில் வெளிநாட்டு மருந்துப் பொருட்கள் மூலமாக தோலின் நிறங்களை மாற்றுதல், இளமையான தோற்றம் பெறுதல், முகப்பொழிவு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுவதாகவும், இந்த வகையான மருந்து பொருட்களுக்கு அதிகமான விலை தருவதால் இப்பொருட்களை கடத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார்.