தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்துவருகிறது. குறிப்பாக சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் நேற்று (மார்ச் 31) மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனைசெய்தனர். அதில், ஒரு கோடியே 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பறக்கும் படையினர் பணத்தைக் கைப்பற்றி ஓட்டுநர் சுந்தர் என்பவரிடம் விசாரணை செய்ததில், தேனாம்பேட்டையில் உள்ள சி.எம்.எஸ். (CMS) அலுவலகத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு லஸ் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் செலுத்தச் சென்றதாகத் தெரிவித்தார்.
அதேபோல், திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது வேன் ஒன்றைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில், இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணையில், ஆக்ஸிஸ், பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான பணம் என்பது தெரியவந்தது.
![தேர்தல் பறக்கும் படையினர் சென்னையில் ரூ.3.5 கோடி பணம் பறிமுதல் தேர்தல் விதிமுறை மீறல் சென்னை வங்கிகளின் பணம் பறிமுதல் வங்கி பணம் பறிமுதல் Seizure of money from Chennai banks Bank Money Seized In Chennai Bank Money Seized Violation of election rules Rs 3.5 crore seized in Chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11232853_che.jpg)
இதேபோல், அயனாவரத்தில் வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 600 ரூபாய் பணமும், ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சிக்னல் அருகே ஆட்டோவில் கொண்டுசென்ற 2.2 லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ரூ.3.5 கோடி பணத்தைப் பறக்கும் படையினர் திருவல்லிக்கேணி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: காரில் கொண்டுசெல்லப்பட்ட 5.66 கோடி ரூபாய் பறிமுதல்!