சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அனைத்து விமான பயணிகளையும் கண்காணித்தனர். அந்த வகையில், ஆப்பிரிக்காவின் கினியாவில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கினியா நாட்டை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பயணி சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்துகொண்டார். இதனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். அதன்பின் சில கேள்விகளை சுங்கத்துறை அதிகாரிகள் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சூட்கேஸ் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக எடையுடன் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த சூட்கேசை பிரித்து பார்த்து சோதனை செய்த போது, அதன் அடி பாகத்தில் ரகசிய பகுதியை செட் செய்து வைத்து அதில் விலையுர்ந்த போதைப்பொருளை மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து ரூ. 3 கோடி மதிப்புள்ள 1 கிலோ 539 கிராம் அம்பெட்டமின் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இவற்றை கடத்திய கினியா நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். இதை யாருக்காக கடத்தி வந்தார். இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என்ற பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: யாருகிட்ட காசு கேக்குற.? ஆட்டோ ஓட்டுநரை இரும்புக்கம்பியால் தாக்கிய வடமாநில இளைஞர்