சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் இன்று (அக்.30) காலை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையை சோ்ந்த ஆண் பயணி ஒருவா், தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருள் எதுவும் இல்லை என கூறிவிட்டு வேகமாக வெளியேற முயன்றார். இதனால் அவர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவரை உள்ளே அழைத்து வந்து முழுமையாக சோதனையிட்டனர். சோதனையில் அவரது உள்ளாடைக்குள் நான்கு சிறிய பாா்சல்களில் தங்கப்பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக 555 கிராம் எடையிருந்த அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.27.31 லட்சம் எனத் தெரியவந்துள்ளது. உடனடியாக தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை - ஜம்தாரா கும்பல் வாக்குமூலம்