சென்னை: மழைநீர் வடிகால் அமைப்பது, சாலைகள் போடுவது, மேம்பாலம் கட்டுவது, பூங்கா அமைப்பது போன்று நவீனமாக்கும் பணிகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் தனியார்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டடு நடத்தி முடிக்கப்படுகின்றன.
கடந்த ஆட்சியில், சென்னை மாநகராட்சியால் போடப்பட்ட, ரூ.286 கோடி மதிப்புள்ள நான்கு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படட்டுள்ளது. தொடர்ந்து பல ஒப்பந்தங்களை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.இந்த நிலையில், ஒப்பந்த முறைகேடுகள் பற்றிய தகவல்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது.
மாநகராட்சியின் ஒப்பந்தங்கள் இ- டெண்டர்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்த முறைகேடுகள் பற்றி அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயரமானிடம் நாம் பேசினோம்.
- மாநகராட்சியின் ஒப்பந்த முறை தற்போது மாறி உள்ள நிலையில், அதில் எவ்வாறு முறைகேடுகள் நடைபெறுகிறது?
இ- டெண்டர் என்பது பெயரளவில் மட்டுமே இருந்து வந்தது. இ- டெண்டர் முறையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருந்தது. இ-டெண்டராக இருந்தாலும், அதிலும், ஒப்பந்தத் தொகையில் ஒருவிழுக்காடு தொகையை இஎம்டி எனப்படும் முன்வைப்பு தொகையாக டிடி நேரடியாக கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்தது. டிடியைக் கொடுக்கத் தவறும் பட்சத்தில் தகுதி பெற முடியாது. இ- டெண்டராக இருந்தாலும் குண்டர்களை வைத்து டிடியை நேரடியாக கொடுக்க தடுக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகிறது. இதனால் முன்வைப்புத் தொகையையும இணையத்தின் வழியாக செலுத்தும் படி அறிவிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. இனி முன்வைப்பு ஆன்லைனில் செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இருந்தாலும் பல பிரச்னைகள் இ டெண்டர் முறையில் இருந்து வருகிறது.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், தேவை இல்லாத இடத்தில் சாலை போடுவது. புதிதாக சாலை போட தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் இருக்கும் சாலை நல்ல நிலையிலேயே இருக்கும். மீண்டும் அந்த இடத்தில் புதிய சாலை போடும் போது ஒப்பந்ததாரர்களுக்கு செலவு குறைவாக இருக்கும், அதனால் அதிக லாபம் கிடைக்கிறது. தேவையில்லாத இடத்தில் சாலை போடும் போடும் போது மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
அடுத்தபடியாக ஒப்பந்தம் விடப்படும் போது, தொடக்கத்திலேயே ஷெட்யூல் ரேட் என்ற ஒன்று போடப்படும். அதாவது ஒப்பந்தத்தின் மதிப்பு என்ன என்பதே அது. இந்த ஒப்பந்த மதிப்பு, சந்தை மதிப்புக்கு நிகராகதான் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்த மதிப்பு, சந்தை மதிப்பை விட 20 விழுக்காடு அதிகமாக விலையேற்றப்பட்டுதான் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. இதனையும் மாற்றவேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அடுத்தது தரம், பல சாலைகளை ஆய்வு செய்து அவைகள் தரமானதாக இல்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது. நல்ல விஷயம். அத்தோடு நின்றுவிடாமல், அதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இது தொடராது.
டெண்டர்போடும் போது, டெண்டருக்கு தேவையில்லாத ஒரு சில பொருட்களை ஒப்பந்தங்களில் சேர்த்து ஒப்பந்ததாரர்களும் அலுவலர்களும் கூட்டுதச் சதியில் ஈடுபடுகின்றனர். அந்த பொருட்களின் விலையை மிகக்குறைவாக சேர்த்து அவைகளைப் பயன்படுத்தாமல், பணத்தை ஒப்பந்ததாரர்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஒப்பந்த விலையை சந்தை மதிப்புக்கு நிகராக கொண்டு வருவதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
- முறைகேடு காரணமாகதான் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா, இல்லை இது அரசியல் நடவடிக்கையா?
இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் உண்மையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. கொசஸ்தலை ஆறு என்று மிப்பெரிய அளவில் ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள். ஆசிய வங்கிகளில் கடன் வாங்கி, ரூ.2,400 கோடி அளவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக மாதவரம் பால்பண்ணை பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. அது மணல் பூமி. அங்கு மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. 2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் போதும் அந்தபகுதியில் மழைநீர் தேங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோல, பலத்திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்று மக்கள் வரிப்பணம் விரயம் செய்யப்பட்டுள்ளது.
- இன்னும் எவ்வளவு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என நினைக்கிறீர்கள்?
கடந்த 5 ஆண்டுகள் போடப்பட்ட திட்டங்களை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடிக்கு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. இவைகளை மாநகராட்சி விசாரிக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. இப்போது கையில் உள்ள ரூ. 3 ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தங்களை உடனடியாக ஆய்வு செய்து அதில் தேவையில்லாததை ரத்து செய்யவேண்டியது அவசியம். அதன் பின்னர் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஒப்பந்த முறைகேடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்த முறைகேடுகளை எவ்வாறு தடுக்கலாம்?
வெளிப்படைத் தன்மை மூலமாகதான் முறைகேடுகளைத் தடுக்க முடியும். அனைத்து ஒப்பந்தங்களையும் மின் ஒப்பந்த முறையில் மாற்ற வேண்டும். வெளிப்படையான ஒப்பந்தங்களை கோர வேண்டும். மிகப்பெரிய அளவில் விதிகளை மாற்றியமைக்கப்பட்டு, மிகக் குறைவான நபர்கள் போட்டியிடும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். ஒப்பந்தங்களில் அதிக நபர்கள் பங்கேற்கும் வண்ணம் விதிகளை மாற்ற வேண்டும். அதேபோல், ஒப்பந்த வேலைகளின் தரத்தை ஆய்வு செய்ய தன்னிச்சையான குழு ஒன்றை அமைக்க வேண்டியது அவசியமானது. இதையெல்லாம் செய்யும் போது முறைகேடுகளைத் தடுக்க முடியும்.