சென்னை: புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கிவருகிறது. நேற்று (செப்.24) காலை 11.15 மணி அளவில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் வங்கிக்கு வந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் இயங்கக்கூடிய திலீப் பில்ட் கான் லிமிடெட் (dileep build con ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் 10 கோடி ரூபாய்க்கான காசோலை ஒன்றை கொடுத்து, அந்த காசோலை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள ராம்சரண் நிறுவனத்திற்கு சேர வேண்டுமென அவர்கள் வங்கி ஊழியரிடம் கூறியுள்ளனர்.
போலி காசோலை
இந்த காசோலையை சரிபார்த்த ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வங்கி உயர் அலுவலரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து வங்கி அலுவலர் சம்பந்தப்பட்ட திலீப் பில்ட் கான் லிமிடெட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த காசோலை 2018ஆம் ஆண்டு தனது நண்பரின் வங்கி கணக்கிற்கு செலுத்தியதாகவும், இது போலியான காசோலை என்றும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக வங்கி மேலாளர் அமித் குமார், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற காவல் துறையினர் போலி காசோலை கொடுத்து மோசடி செய்ய முயன்ற மூவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சாவித்திரி(40), விருகம்பாக்கத்தை சேர்ந்த பானுமதி (44), கேரளாவை சேர்ந்த பிரசாத் மேத்யூ (45) என தெரியவந்தது.
9 பேர் கைது
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அகீம் ராஜா (40), நாராயணன் (63), விஜயகுமார் (42), கோபி நாதன்(56), செந்தில்குமார்(39), முருகன்( 55) ஆகியோர் தங்களிடம் காசோலையை கொடுத்து பணம் பெற்று தர கூறினர். அதற்கு கமிஷன் தருவதாகவும் அவர்கள் கூறினர் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து காசோலை மோசடி செய்ய முயன்ற ஒன்பது பேர் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஆவண மோசடி உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் நடந்த ஸ்டாமிங் ஆபரேஷன்; ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது