சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புதிதாக கரோனா தொற்று பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், “திருவொற்றியூர் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட தெருக்களில் மிகத் தீவிரமான தடுப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. மக்கள் நெருக்கமாக இருக்கும் இந்தப் பகுதிகளில் ஆரம்ப நிலையிலேயே கரோனாவைக் கண்டறிய பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மதித்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது, வேலையை விட்டு நீக்குவது போன்ற விஷயங்கள் எங்கள் கவனத்திற்கு வந்தால் அந்த நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “களத்திலே காணாமல் போன தலைவர் வீட்டில் இருந்தபடி அறிக்கை விட்டு மக்களை குழப்புகிறார். இதை மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்” என்று ஸ்டாலினை விமர்சித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: விசாரணையை தொடங்கவுள்ள சிபிசிஐடி