சென்னை புது வண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர், அம்மனியம்மன் தோட்டம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் மகன் தினேஷ் (25) கூலி வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதாகவும் தெரிகிறது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை அதே பகுதியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தினேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கலைச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர், தினேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக, புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினேஷுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளதாகவும், இதனால், கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில், இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கொல்லப்பட்ட தினேஷின் தந்தை பிரகாஷ், அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். மேலும், தந்தை பிரகாஷ் மீது கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. புழல், செங்குன்றம் பகுதிகளில், பெண் வேடமிட்டு, லாரிகளை மடக்கி, ஒட்டுநர்களை கத்தி முனையில் வழிப்பறி செய்வதில், கை தேர்ந்த பிரகாஷை, சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரின் மகனையும் ஒரு கும்பல் வெறித்தனமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.