சென்னை ராஜமங்கலம் கங்கையம்மன் கோயில் தெருவில் வசித்துவருபவர் ரவுடி ரமேஷ் (23). இவரது மச்சான் அபினேஷ் (24). இவர்கள் இருவரும் புறா கூண்டு செய்யும் பணி செய்துவந்துள்ளனர். இவர்களது மாமியாரின் வீடு மாதவரம் பகுதியிலுள்ள வஜ்ரவேல் பகுதியில் இருந்ததால் அடிக்கடி இருவரும் அங்கு சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் அங்கே செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த அலி மற்றும் அவரது நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை இருந்து வந்துள்ளது.
இச்சூழலில், நேற்று (ஜூன் 12) இரவு அபினேஷ் வழக்கம்போல் வஜ்ரவேல் தெரு வழியாக வீட்டிற்கு வரும்போது அலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அபினேஷ், ரமேஷ், அவரது நண்பர் சரண் ஆகியோருடன் அலி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது கொளத்தூர் ஓடை பகுதி அருகே அலியின் நண்பர்களான வெல்டிங் சுரேஷ், சரவணன், பாரதி ஆகியோர் அவர்களை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் மூவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்தக் காயங்களுடன் அபினேஷும் சரணும் தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரமேஷின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். கொலை நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த ரமேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கொலை: பின்னணி என்ன?