விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே குயிலாப்பளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் தாதா மணி என்றழைக்கப்படும் மணிகண்டன். இவர் மீது...
- எட்டு கொலை வழக்குகள்,
- ஆறு வழிப்பறி,
- நான்கு கடத்தல் வழக்குகள்
உள்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 20 நாட்களாக சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
காவல் துறைக்கு சவாலாக இருந்த மணி
ரவுடி மணிகண்டன் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினருக்குப் பெரும் சவாலாக இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டனை நெடுநாட்களாக விழுப்புரம் காவல் துறையினர் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில், ரவுடி மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் மணிகண்டனை பிடிக்க சென்னை வந்தனர்.
தாதா மணியை சுற்றிவளைத்த காவல் துறை
சென்னை கொரட்டூரில் தனது கூட்டாளிகளுடன் தாதா மணி பதுங்கியிருப்பதை அறிந்த விழுப்புரம் தனிப்படை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து அவரை சுற்றிவளைத்தனர்.
காவல் துறையினர் தாதா மணிகண்டனை பிடிக்க முயன்றபோது, தனது கையில் வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால் அவர்களை தாக்கியுள்ளார். இதில், உதவி ஆய்வாளர் பிரபு, தனிப்படை உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தற்காப்பில் களமிறங்கிய காவல் துறை
இதனால், வேறு வழியின்றி தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தனிப்படை உதவி ஆய்வாளர் பிரகாஷ் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தாதா மணியை நோக்கி மூன்று முறை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்துக்குள்ளான பிரபு, பிரகாஷ் ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்கலாமே: ரத்தம் சொட்டசொட்ட ஓடிவந்த இளைஞர்! - 15 ஆண்டுக்குப் பிறகு பழிதீர்த்த கும்பல்?